திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.58 திருக்கரவீரம்
பண் - பழந்தக்கராகம்
அரியும் நம்வினை யுள்ளன ஆசற
வரிகொள் மாமணி போற்கண்டங்
கரிய வன்றிக ழுங்கர வீரத்தெம்
பெரிய வன்கழல் பேணவே.
1
தங்கு மோவினை தாழ்சடை மேலவன்
திங்க ளோடுடன் சூடிய
கங்கை யான்றிக ழுங்கர வீரத்தெம்
சங்க ரன்கழல் சாரவே.
2
ஏதம் வந்தடை யாவினி நல்லன
பூதம் பல்படை யாக்கிய
காத லான்திக ழுங்கர வீரத்தெம்
நாதன் பாதம் நணுகவே.
3
பறையும் நம்வினை யுள்ளன பாழ்பட
மறையும் மாமணி போற்கண்டங்
கறைய வன்றிக ழுங்கர வீரத்தெம்
இறைய வன்கழல் ஏத்தவே.
4
பண்ணி னார்மறை பாடலன் ஆடலன்
விண்ணி னார்மதி லெய்தமுக்
கண்ணி னானுறை யுங்கர வீரத்தை
நண்ணு வார்வினை நாசமே.
5
நிழலி னார்மதி சூடிய நீள்சடை
அழலி னாரன லேந்திய
கழலி னாருறை யுங்கர வீரத்தைத்
தொழவல் லார்க்கில்லை துக்கமே.
6
வண்டர் மும்மதில் மாய்தர எய்தவன்
அண்டன் ஆரழல் போலொளிர்
கண்ட னாருறை யுங்கர வீரத்துத்
தொண்டர் மேற்றுயர் தூரமே.
7
புனலி லங்கையர் கோன்முடி பத்திறச்
சிவன லாண்மை செகுத்தவன்
கனல வனுறை கின்ற கரவீரம்
எனவல் லார்க்கிட ரில்லையே.
8
வெள்ளைத் தாமரை யானொடு மாலுமாய்த்
தெள்ளத் தீத்திர ளாகிய
கள்ளத் தானுறை யுங்கர வீரத்தை
உள்ளத் தான்வினை ஓயுமே.
9
செடிய மண்ணொடு சீவரத் தாரவர்
கொடிய வெள்வுரை கொள்ளன்மின்
கடிய வன்னுறை கின்ற கரவீரத்
தடிய வர்க்கில்லை யல்லலே.
10
வீடி லான்விளங் குங்கர வீரத்தெம்
சேடன் மேற்கசி வாற்றமிழ்
நாடு ஞானசம் பந்தன சொல்லிவை
பாடு வார்க்கில்லை பாவமே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com